மத்தியப் பிரதேசம் அகர் மால்வா மாவட்டம் சஸ்னரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி, மக்களிடையே கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கிடங்கில் பணிபுரிந்த ரபீக் என்ற ஊழியர், திடீரென மாரடைப்பால் துடித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த கிடங்கு உரிமையாளரும் அவரது மகனும் எந்தவித உதவியும் செய்யாமல் தங்கள் மொபைல் போன்களில் பிசியாக  ஈடுபட்டிருந்தனர்.

சுமார் ஆறு நிமிடங்கள் நீளமான சிசிடிவி காட்சியில், ரபீக் நாற்காலியில் துடித்துக் கொண்டிருந்தபோதும், உரிமையாளர் எழுந்து பார்க்கவோ, ஆம்புலன்ஸ் அழைக்கவோ முயலவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவத்திற்குச் சாட்சியமான சிசிடிவி காட்சிகளில், கிடங்கில் இருந்த சில ஊழியர்கள் மட்டுமே ரபீக்கை உதவ முயற்சி செய்தனர். அவருக்கு தண்ணீர் கொடுக்கவும், மார்பைப் தேய்க்கவும் முயன்றும் பயனின்றி அவர் உயிரிழந்தார்.

“>

 

ரபீக் பணியாற்றிய “திருப்பதி டிரேடர்ஸ்” எனும் கிடங்கில், அதிக எடையுள்ள பொருட்களை தூக்கச் சொல்லப்பட்டதாகவும், அதுவே அவருக்கு மாரடைப்புக்குக் காரணமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் மிகுந்த துயரமானது, அவர் துடித்துக் கொண்டிருக்கும் போதும் உரிமையாளர் மற்றும் அவரது மகன் அக்கறையின்றி மொபைல் பார்த்துக் கொண்டிருந்தது என்பதேயாகும்.

இச்சம்பவம் குறித்து ரபீக்கின் மனைவி ஷைஸ்தா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த நாளிலேயே குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் நிலையத்துக்கு சென்று சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்து, கிடங்கு உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்கள், உதவாத உரிமையாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மரணமடைந்த ஊழியரின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி, மனிதாபிமானமற்ற அக்கறையின்மையை சாடும் கோபக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.