இயற்கை சீற்றங்கள் மனிதர்களின் உயிரை பறிப்பதுடன் நின்றுவிடுவதில்லை; சில தருணங்களில் மனிதர்களின் முகமூடியைக் கிழித்து, அவர்களின் உண்மையான சுயரூபத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சிச் சம்பவம் தான் தற்போது நேபாளத்தில் அரங்கேறியுள்ளது.

தற்போது கடுமையான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவை எதிர்கொண்டு வரும் நேபாளத்தில், பேரிடரின் கோரத்தாண்டவம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுள்ளது. புதன்கிழமை அன்று ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 175-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; கிட்டத்தட்ட 800 பேர் வரை மாயமாகியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரும் என்ன ஆனார்கள் என்றே தெரியாத சோகமான சூழல் நிலவுகிறது.

 

இந்த பேரிடர் சூழலில் தான் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீ போல பரவி வருகிறது. அந்த வீடியோவில், வெள்ளச் சேற்றில் மற்றும் குப்பைகளுக்கு இடையில் ஒரு பெண்ணின் சடலம் சிக்கிக் கிடக்கிறது. அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

அப்போது அங்கு வந்த இரண்டு மனிதர்கள் செய்த காரியம், அதைப் பார்ப்பவர்களின் ரத்தத்தையே உறையச் செய்யும் வகையில் இருந்தது. அதில் ஒருவன் மரக்கட்டையைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் உடலை அருகில் இழுக்கிறான். மற்றொருவனோ சற்றும் ஈவு இரக்கமின்றி அப்பெண்ணின் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, காதில் இருந்த மணியைக் கழட்டுகிறான். சமூக வலைதளங்களில் வெளியான தகவலின்படி, அது ஒரு தங்கத் தோடு எனத் தெரிகிறது.

அந்தத் தோட்டைப் பறித்த கையோடு, சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி அந்த இடத்தைவிட்டு இருவரும் தப்பிச் செல்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், இந்த வெட்கக்கேடான செயலைச் சுற்றியிருந்த பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாரும் தட்டிக்கேட்கவில்லை. மாறாக, சிலர் தங்களின் செல்போன்களில் இந்த அவலத்தைப் படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே 1.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துவிட்டது. இதைக் கண்ட நெட்டிசன்கள், “கலியுகம் அதன் உச்சத்தில் இருக்கிறது”, “மனிதநேயம் செத்து பல காலம் ஆகிவிட்டது”, “விலங்குகள் கூட இவர்களை விட எவ்வளவோ மேல்” என்று தங்களின் ஆத்திரத்தையும் வேதனையையும் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.