விஜயின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், ஐ.ஆர்.எஸ் அதிகாரி உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். வருகின்ற 22-ஆம் தேதி விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளதால் தொண்டர்கள் குஷியில் உள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட தொண்டரணி சார்பில் புது போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ஜூன் 22-ஆம் தேதி பிறந்தநாள் காணும் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே வாழ்க பல்லாண்டு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதால் விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகளிடம் கேட்டபோது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டால் விஜய் வெற்றி பெற வைப்போம் என நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். இதே போல கடலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் விஜய் போட்டியிட வலியுறுத்தி அந்த கட்சியினர் போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது உறுதியாகவில்லை.