சென்னை ராஜீவ்காந்தி பகுதியை சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (25) என்பவர் கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சக்திவேல் மது அருந்திவிட்டு அருகில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் செந்தில்குமார் வேலையின் காரணமாக சென்ற போது, சக்திவேல் தகராறு செய்து கொண்டிருப்பதை பார்த்தார்.

பின்பு அவர் அங்கு சென்று சக்திவேலை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அது கைகலபாக மாறியது. இதனால் கோபமடைந்த செந்தில்குமார் அவரை அடித்து கீழே தள்ளினார். இதில் சக்திவேலுக்கு மூக்கிலிருந்து ரத்தம் வந்த நிலையில் அவர் மயங்கி கிடந்தார்.

இதையடுத்து அருகில் உள்ளவர்கள் சக்திவேலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.