மெட்ரோ ரயில் சேவை தற்போது சென்னையில் மட்டும் இருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவையை விரிவு படுத்துவது தொடர்பாக சிஎம்ஆர்எல் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் மெட்ரோ லைட் எனப்படும் இலகுரக மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டு சாத்தியமாகுமா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் சாலையில் தனி தண்டவாளத்தில் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் சேவையை மதுரையில் அறிமுகப்படுத்தலாம் என்று திட்டமிட்டிருந்த நிலையில், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் இருப்பதால் உயர்மட்ட பாலங்களைக் கட்டி மெட்ரோ ரயில் சேவையை இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பொருட்செலவில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவது தொடர்பாக பொறியாளர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் முதல் கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு முதலில் 3 ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து 25 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் மதுரையில் முதல் கட்டமாக 20 இடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரயிலின் பணிமனை திருமங்கலத்தில் அமையும் என்று கூறப்படுகிறது. இங்கு சுரங்க பாதை அமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது விரிவான அறிக்கை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் முதல் கட்டமாக மெட்ரோ ரயில் சேவை வர இருப்பதாகவும் அடுத்ததாக மதுரை விமான நிலையம் முதல் காட்டுபுலி நகர் வரையிலும், நாகமலை புதுக்கோட்டை முதல் மணலூர் வகையிலும் மெட்ரோ ரயில் சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.