ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளரருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை திரும்பப் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டது.

இதேபோன்று ஓபிஎஸ் தரப்பிலும் தனியாக நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் கொடுக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் கொடுத்த பட்டியலை நிராகரித்துள்ளது. இபிஎஸ் கொடுத்த 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். இது தவிர அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு பிரச்சாரம் செய்வோம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியிருந்த நிலையில் தற்போது அவருக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி கிடைக்கப்படாதது ஓபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.