சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் அதனை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 10 வருடங்களில் அதிகரித்துள்ளது. அதற்கு தகுந்தார் போல் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தாம்பரம் மற்றும் ஆவடி போன்றவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல் அவர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ரயில் போக்குவரத்து வசதியை உருவாக்குவதும் தற்போது முக்கியமாகியுள்ளது. அந்த வகையில் பயணியர் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்துக்காக கடந்த 2013 ஆம் ஆண்டு ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 60 கிலோ மீட்டர் தூரம் புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டப் பணியை முடிக்க மொத்தம் 839 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. நடந்த 2012 -ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கான பணிகள் வேகம் எடுக்க தொடங்கியது.

அதிலும் குறிப்பாக புதிய ரயில் பாதை திட்டத்திற்கு இறுதி கட்ட சர்வ பணிகள் மேற்கொள்ள தெற்கு ரயில்வே கடந்த வருடம் டெண்டர் வெளியிட்டது. இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி இடையான புதிய ரயில் திட்டத்திற்கு ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆவடி- ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி திட்டம் உட்பட தமிழகத்தில் திண்டிவனம் – திருவண்ணாமலை இடையேயும், திண்டிவனம் – நகரி இடையேயும் மாமல்லபுரம் வழியாக செங்கல்பட்டு -கடலூர் இடையேயும் என ஒன்பது வகையான ரயில் திட்டங்களுக்கு மத்திய ரயில்வே நிதி பட்ஜெட்டில் ரூ.1,057 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறுதி கட்ட சர்வே பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நில எடுப்பு செய்ய இருக்கும் பகுதிகள் ஆராய்ந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு  வழங்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதேபோல் இந்த திட்டத்திற்கு தேவையான மொத்த நிதியில் தற்போது குறைவான நிதியை ஒதுக்கி உள்ள நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் நிதி ஒதுக்கினால் திட்டம் மேலும் வேகம் எடுக்கும். ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் பகுதியில் மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சாலை போக்குவரத்தை நம்பி இருக்கின்ற நிலையில் தற்போது ரயில் போக்குவரத்துக்கான பணி தொடங்கி இருப்பதால் அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.