அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவர், வெறும் பாதி சமைக்கப்பட்ட, மென்மையான பன்றி இறைச்சியை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் அவர் ஒற்றைத் தலைவலி என்ற சிறிய பிரச்சனையால் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அது மெதுவாக மோசமடைந்து, கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அவரது உடல் சில நேரங்களில் செயல்பட முடியாத நிலைக்கு சென்றது. தொடர்ச்சியாக தலைவலி அதிகரித்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சோதனைகள் மூலம் அவரது மூளையில் பல காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவர்கள் மேற்கொண்ட தீவிர பரிசோதனையில், அவரது மூளையில் “நாடாப்புழு” (Neurocysticercosis) தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இது சரியாக சமைக்கப்படாத இறைச்சி, குறிப்பாக பன்றி இறைச்சியில் உள்ள ஒட்டுண்ணிகள் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்தான தொற்றாகும்.

இந்தப் புழுக்கள் அவரது மூளையின் வெள்ளைப் பொருள் பகுதியில் (White matter) உருவாகி, நரம்பு செல்கள் செயலிழக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தன. அதன் பின்னர், அவர் உண்மையை வெளிப்படுத்தும்போது, அடிக்கடி மென்மையாகவே சமைக்கப்படும் பன்றி இறைச்சியை சாப்பிடுவதாகவும் கூறியுள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பல வாரங்கள் ஐசியுவில் வைத்துப் பராமரிக்கப்பட்டார். நோய்க்கேற்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள், அழற்சி கட்டுப்பாட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
சிகிச்சைக்குப் பிறகு, அவரது நிலைமை மேம்பட்டு, மூளையில் இருந்த புண்கள் படிப்படியாக குறைந்து, தலைவலி குறைந்தது. இந்த சம்பவம் ‘American Journal of Case Reports’ என்ற மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளதுடன், “உணவுகளை முழுமையாக சமைத்து சாப்பிடவேண்டும்” என்ற எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் ஒரு கடும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
