மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை சந்திக்க உள்ளனர். மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் 3 மாதங்களை எட்ட உள்ள நிலையில் இதுவரை கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றிய மாநில அரசுகள் திணறி வருகின்றன. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே எதிர்கட்சிகளை சேர்ந்த 21 எம்பிக்கள் கடந்த வாரம் மணிப்பூர் சென்று நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து பேசினர். இந்நிலையில் மணிப்பூர் சென்ற அந்த எம்பிக்கள் குழு மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை இன்று காலை 11:30 மணிக்கு சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது மணிப்பூரில் தற்போதுள்ள நிலவரம் குறித்தும் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளதாக தகவல் வெளியானது. கூட்டணி கட்சி தலைவர்கள் குடியரசு தலைவரை சந்திக்க உள்ள நிலையில் நேற்று இரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் திடீரென குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மணிப்பூர் கலவரம் குறித்து குடியரசு தலைவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.