திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பாலாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டுவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்காக தோண்டப்பட்ட போது எடுக்கப்பட்ட மணல் ஆற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆற்றில் குவித்து வைத்திருந்த மணலை இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்களும், ஒப்பந்தக்காரர்களும் சேர்ந்து கொள்ளையடிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது.  மேலும் ஆற்று மணல் திருடப்படுவதாக ஊர் பொதுமக்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த போது மணல் திருடியது உறுதி செய்யப்பட்டது.

எனவே மணல் திருடுபவர்களிடம் எச்சரித்துவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து மணல் அள்ளியதால் அம்பலூர் கிராம நிர்வாக அலுவலரான பூபாலன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மணல் அள்ளுபவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின்பு மணல் அள்ளுவதற்கு உபயோகித்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

அதற்கு உடந்தையாக இருந்த ஒப்பந்ததாரர் வேலுசாமி என்பவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாகவே கடந்த பிப்ரவரி மாதம் பூபாலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி ஆய்வாளர் கண்ணனை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.