மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் அமைந்துள்ளது. இந்து கோவில் 1666 ஆம் வருடத்திற்கு முன்பிருந்தே உள்ளதாக கூறப்படுகிறது. மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் தான் நாளடைவில் மணக்குள விநாயகராக மாறி உள்ளது. இந்த ஆலயத்தில் கேது கிரகத்துக்கு உரியவராக மணக்குள விநாயகர் இருக்கிறார். இந்த ஆலயத்திற்கு கேது கிரக அமைப்பில் பிறந்த குழந்தைகளை கொண்டு வந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் இருப்பார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் 5 உற்சவர்கள் உள்ளனர்.

மணக்குள விநாயகர்

நர்த்தன விநாயகர்

லட்சுமி கணபதி

சக்தி விநாயகர்

சித்தி – புத்தி விநாயகர்

இந்த ஐவரில் மணக்குள விநாயகர் தான் அதிக உற்சவங்களில் பங்கேற்பார். மற்ற நால்வரும்  அவர்களுக்குரிய தனித்துவமான விழாக்கள் வரும்போது வீதி உலா சென்று வருவார்கள்.

இந்த மணக்குள விநாயகருக்கு பக்தர்கள் மனதில் நீங்கா இடம் உண்டு. காரணம் 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போது கடலோர பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பல இடங்களில் கடலில் இருந்து கடல் நீர் பல கிலோமீட்டர் தொலைவிற்கு ஊருக்குள் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த சமயத்தில் புதுச்சேரி மக்கள் மட்டும் எந்த பயமும் சலனமும் இன்றி இருந்தனர். அங்கு மட்டும் சுனாமியின் போது கடல் உள்வாங்கி சென்றது. இதற்கு மணக்குள  விநாயகர் தான் காரணம். அவர்தான் தங்களை சுனாமி பேரழிவிலிருந்து காப்பாற்றியதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.