தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது நேற்று எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நிலையில் அவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இபிஎஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு சட்டசபை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கும் நிலையில் சட்டசபையில் உண்மை நிலையை பேசினால் அது வெளியே வந்துவிடும். நாங்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் மக்கள் பிரச்சினைக்காக குரல் எழுப்பி வருகிறோம். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை.

தங்களிடம் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறிய நிலையில் தற்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்கு கொடுத்த காரணத்திற்காக முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு விவகாரம் நிலுவையில் இருப்பதாக கூறிய நிலையில் தற்போது எதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக தான் இப்படி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்கள் என்று கூறினார். மேலும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் ஆட்சிக்கு வந்த பின்பும் என்று இரட்டை விட போடக்கூடிய ஒரே கட்சி திமுக தான் என்று கூறினார்.