நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூலை 1-ம் தேதி என்பதால் பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.

அதன்படி இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது. அதாவது 501 km முதல் 1500 km வரை 5 ரூபாயும், 1500 முதல் 2500 km வரை 10 ரூபாயும், 2501 முதல் 3000 கிலோமீட்டர் வரை 15 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்லீப்பர், முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புகளில் கிலோமீட்டருக்கு தலா ஒரு பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டிகளில், இருக்கைக்கு குளிர்சாதன பெட்டி, 1, 2, 3 வகுப்புகளில் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புறநகர் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

அதன் பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை இணைப்பதற்கு டிசம்பர் 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி பான் கார்டு பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய நேரடி வரி வாரியம் செயல்படுத்த இருக்கிறது.

ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் மாற்றம் வருகிறது. அதாவது இன்று முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம். தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு முகவர்கள் மூலமாக 30 நிமிடங்களுக்கு முன் புக் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு ஏசி பெட்டிகளில் காலை 10 மணி முதல் 10:30 மணி வரையிலும், ஸ்லீப்பர் பெட்டிகளில் காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும் புக் செய்ய முடியும்.

இன்று முதல் ஐஆர்சிடிசி விதிகளின்படி இந்த இணையதளம் மற்றும் செயலி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம். தட்கல் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் மற்றும் ஓடிபி நம்பர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஜூலை 15ஆம் தேதி முதல் இனிமேல் குறைந்தபட்ச டியூ தொகை கணக்கீடு, இலவச ஏர் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் நிறுத்தம், பணம் செலுத்தும் முறை போன்றவைகளில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் யுபிஐ பணம் பரிவர்த்தனைகளில் பணம் செலுத்தக்கூடிய நபரின் பேங்கிங் அக்கவுன்ட் நம்பர் மட்டுமே காட்டும். மற்றபடி அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விஷயங்கள் காட்டப்படாது. இது மோசடிகளை தவிர்ப்பதற்காக நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி மாதம் ஏடிஎம்மில் 3 முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது அதாவது வங்கியின் ஏடிஎம் தவிர பிற ஏடிஎம்களில் மாதம் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் கட்டணம் பிடிக்கப்படும்.

மேலும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் என்பதால் இன்று ஜூலை 1ஆம் தேதி என்பதால் சிலிண்டர் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா என்று அறிவிப்பு வெளிவரும்.