
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயண அட்டைகளின் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2025 மார்ச் 31 வரை செல்லத்தக்கதாக இருந்த பயண அட்டைகள், தற்போது 2025 ஜூன் 30 வரை செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார். பயனாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் பயணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் www.tn.e.sevai என்ற இணையதளம் அல்லது அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து பயன்பெற முடியும். முதற்கட்டமாக இந்த சேவை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 07.09.2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுவதற்காக, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு போக்குவரத்துக் கழகங்களிலும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயனாளர்கள் நேரடி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், இணையம் வழியாக பயண அட்டைகளை பெற்று பயனடையலாம்.