புதுச்சேரியில், மர்ம நபர்கள் அனுப்பிய ஆன்லைன் லிங்குகள் மற்றும் செயலிகள் மூலமாக பலரை ஏமாற்றிய மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SHOPIFY, E2, G2, NEWYARK, GD7, GD6, NYE20, PO1 1 GIFT, C 23 போன்ற பெயர்களில் அனுப்பப்பட்ட செயலிகள் மூலம், “ரூ.3,500 செலுத்தினால் 30 நாட்களுக்கு தினமும் ரூ.112 கொடுப்போம்”, “ரூ.28,000 செலுத்தினால் 30-வது நாளில் தங்கம் வாங்கலாம் அல்லது ரூ.1,08,000 பெறலாம்” என பணம் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் சிலர் இந்த செயலிகளுக்கு  பணம் செலுத்தியதில், 60 நாட்கள் வரை சொன்னபடி பணம் வந்ததோடு முதலீட்டுத் தொகையும் திருப்பித் தரப்பட்டதால், மேலும் பலர் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அதன் பின்னர் பணப்பரிவர்த்தனைகள் திடீரென நிறுத்தப்பட்டதோடு, ஆப்புகளும் செயலிழந்துள்ளன. இதனால், புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மோசடிக்குள்ளாகியது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட  20-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். தற்போது இந்த மோசடியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பலரும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட செயலிகள்  மூலம் கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருக்கலாம் என சைபர் கிரைம் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பொதுமக்கள் யாரும் இந்தவகை தவறான முதலீட்டு தளங்களில் நம்பிக்கை வைத்து பணம் செலுத்த வேண்டாம் எனவும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.