
சென்னை மாவட்டம் நன்னையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி ஒருவர், அதிக லாபம் கிடைக்கும் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து, ஆன்லைன் பங்கு முதலீட்டில் ₹6.58 கோடி வரை பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதிக லாபம் தரும் பங்கு தகவல்களை வழங்குவதாக கூறி வாட்ஸ்அப்பில் வந்த செய்தியைக் கண்டு, ஓய்வு பெற்ற அதிகாரி இரண்டு வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்காக ஒரு பங்கு வர்த்தக செயலி இணைப்பு அனுப்பப்பட்டது.
அதனை பதிவிறக்கம் செய்து, செயலியின் வழியாக பங்குகளில் முதலீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. நம்பிக்கையில் செயல்பட்ட அதிகாரி, தனிப்பட்ட மற்றும் குடும்ப வங்கிக் கணக்குகள் மூலமாக ₹6.58 கோடி வரை பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினார்.
இது ஒரு மோசடி என்று பின்னர் உணர்ந்த அதிகாரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜித் நாயர் (47), அப்துல் சாலு (47), முகமது பர்விஸ் (44) ஆகிய மூவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை பறிமுதல் செய்தனர். மேலும், பணம் கொடுத்து பிறரின் வங்கிக் கணக்குகளை வாங்கி மோசடியில் பயன்படுத்திய பாணி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.