குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உப்பு, சர்க்கரை ஆகியவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பிஸ்பெனால் ஏ போன்ற நச்சு ரசாயனங்கள் இதில் உள்ளதாகவும், இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும் என்றும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக, கருவில் உள்ள குழந்தைகளின் நஞ்சுக்கொடியில் கூட இந்த நுண்துகள்கள் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வு, பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் விற்கப்படும் பொருட்களின் லேபிள்களில் கட்டாயம் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த எச்சரிக்கை வாசகங்கள் சிவப்பு நிறத்தில், 10 அளவு எழுத்துருவில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், இது குறித்து நான்கு வாரங்களுக்குள் உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு நீதிபதிகள்ஆணையிட்டனர்.

ஆய்வுகள் இன்னும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் எச்சரிக்கை வாசகங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என FSSAI தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், மக்களின் பாதுகாப்பே முக்கியம் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், ஆய்வுகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியது.

மேலும், பெட் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் குடிநீர், உப்பு, சர்க்கரை விற்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த புதிய லேபிளிங் விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது குறித்த நிலை அறிக்கையை ஏப்ரல் 10, 2026-க்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.