மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் பாதுஷா மலை எனக்கூறி சிலர் தர்காவில் ஆடு மற்றும் கோழி போன்றவைகளை பலியிட வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் கூட நடந்தது. இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை வந்த நிலையில் அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மலை முழுவதையும் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். சமூக ஆர்வலர் கே‌ ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் இன்று முடித்து வைத்தனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை மக்களே அமைதியாக இருக்கும்போது நீங்களே இப்படி வழக்கு தொடர்ந்து சண்டை போட வைத்து விடுவீர்கள் போல. இது போன்று வழக்குகளை எதற்காக தாக்கல் செய்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்டதோடு வழக்கையும் முடித்து வைத்தனர்.