உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா கடந்த மாதம் தொடங்கிய நிலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 26 ஆம் தேதி மகா கும்பமேளா நிறைவடையும் நிலையில் இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் கும்பமேளாவுக்கு சென்று வரும் நிலையில் பிரதமர் ஜனாதிபதி முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிரயாக்ராஜ் ஆறுகளில் ஃபீக்கல் கோலி பார்ம் என்ற பாக்டீரியாக்கள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது.

அதாவது இந்த வகை பாக்டீரியாக்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் மலம் ஆகியவற்றின் மூலம் பரவக்கூடியதாகும். இதன் காரணமாக அந்த நதிகள் குளிப்பதற்கு பாதுகாப்பானது கிடையாது என்று அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆதாரம் இல்லாமல் தவறான அறிக்கைகளை பரப்ப கூடாது எனவும் இது போன்ற அறிக்கைகள் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போன்று இருப்பதாகவும் கூறினார்.

அதோடு மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் உள்ள தண்ணீரை குளிப்பது மட்டுமின்றி குடிக்க கூட செய்யலாம் அதற்கு உகந்தது தான் என்று கூறினார். இதற்கு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது மகா கும்பமேளாவில் பக்தர்கள் நீராடும் இடத்தில் இருந்து தண்ணீரை எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவருடைய அமைச்சரவைக்கு சவால் விடுகிறேன் என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.