மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பேருந்து நிலையத்திற்கு நேற்று அதிகாலை நேரத்தில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். அந்தப் பெண் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட ஒருவர் அந்த பெண்ணை நெருங்கினார். அந்த நபர் இளம்பெண்ணிடம் சகோதரி என பேச ஆரம்பித்து செல்ல வேண்டிய இடம் குறித்து கேட்டுள்ளார். பின்னர் உங்கள் ஊருக்கு பேருந்து வராது எனக் கூறி பேருந்து நிற்கும் இடத்திற்கு தான் அழைத்து செல்வதாக கூறி அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு அரசு சொகுசு பேருந்தை காண்பித்து இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பேருந்து என்று காண்பிக்க அந்த பெண்ணும் நம்பி ஏறினார். அவருடன் ஏறிய நிலையில் பேருந்தின் கதவை மூடிவிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

பெண் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. சொகுசு பேருந்து என்பதால் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பெண்ணின் சத்தம் வெளியே கேட்காத நிலையில் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அந்தப் பெண் தன் தோழிக்கு போன் செய்து நடந்த விவரங்களை கூறி கதறி அழுதார். பின்னர் இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில்  தத்தாத்ரேய காடே  என்ற 36 வயது வாலிபர் பெண்ணை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இவரை பிடிப்பதற்கு தனி படை அமைக்கப்பட்ட நிலையில் குற்றவாளி குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று புனே காவல்துறையினர் அறிவித்ததோடு தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறினர். இந்த நிலையில் பெண்ணை பலாத்காரம் செய்த அந்த நபரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.