கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி மாநகரில் பாலகுமார் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய மனைவி கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு பதவி உயர்வு கிடைத்ததால் லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இதனால் குழந்தைகள் இருவரும் பாலகுமாரின் பெற்றோர் கவனிப்பில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பாலகுமார் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் இவருடைய வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பாலகுமார் சடலமாக தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இவருடைய உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பணி முடிந்து வந்த பிறகு பாலகுமார் தன்னுடைய மனைவியுடன் செல்போனில் பேசியது  தெரியவந்தது. அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாலகுமாரின் மனைவி அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவர் தன்னுடைய மாமனார், மாமியாருக்கு தகவல் தெரிவித்து கணவரை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போதுதான் பாலகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.