
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த காவல் ஆய்வாளரின் ஓட்டுனரான முதல் நிலை போலீஸ்காரர் முத்துக்குமார் (40) என்பவர் கடந்த 27ஆம் தேதி பணி முடிந்து முத்தையன் பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்ற போது திடீரென அவருடன் சிலர் சண்டை போட்டனர். அதன்பின் கடையிலிருந்து வெளியேறிய அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் தலையில் கல்லை தூக்கி போட்டு படுகொலை செய்தனர். இந்த கொலையில் கஞ்சா வியாபாரிகள் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் பொன்வண்ணன் என்பவர் முத்துக்குமாரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இவர் ஒரு கஞ்சா வியாபாரி. இவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பொன்வண்ணன் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது பொன்வண்ணன் போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனால் உசிலம்பட்டி நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் அவரை துப்பாக்கியால் சுட்டார். மேலும் இந்த என்கவுண்டரில் பொன்வண்ணன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.