ஜம்மு மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் இன்று  பல ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணைகள் ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்னியா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட இடங்களை குறிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தியாவின் வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த முயற்சியை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியதால், எந்த சேதமும் ஏற்படவில்லை.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் F-16 போர் விமானத்தை ஜம்மு நோக்கி அனுப்பியதும், அதனை இந்தியா துல்லியமாகக் கண்டறிந்து சுட்டு வீழ்த்தியது.

மேலும், பாகிஸ்தானின் இரண்டு JF-17 போர் விமானங்களும் இந்திய வான் படையினரால் இடைப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணமாக ஜம்மு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜம்மு விமான நிலையத்தில் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. இதேபோன்று ராஜஸ்தானின் ஜெய்சால்மர் உள்ளிட்ட சில பகுதிகளில் பாகிஸ்தான் முயற்சித்த ட்ரோன்கள் அனைத்தும் இந்திய பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப்பட்டன.

தற்போது நிலைமை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.