நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களும் போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வில் தேசிய அளவில் 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவர் அளித்துள்ள பேட்டி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தனது வெற்றி குறித்தும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டபோது தான் சந்தித்த மனநிலை குறித்தும் பேசிய அந்த மாணவர், “முதலில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டபோது எனக்கு மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அதற்காக அழுதுகொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தேன். அதனால் சோர்ந்து போகாமல், எனது முந்தைய படிப்பு அட்டவணைப்படியே (Study Schedule) தொடர்ந்து படிப்பதில் தீவிரமாக கவனம் செலுத்தினேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “இன்னும் நல்ல மதிப்பெண்களைப் பெற கடவுள் எனக்குக் கொடுத்த மறுவாய்ப்பாகவே இந்தச் சூழ்நிலையை நான் கருதினேன். நான் எதற்காகப் போராட்டத்திற்குச் செல்ல வேண்டும்? போராட்டங்களில் கலந்துகொள்வதற்குப் பதிலாக நன்றாகப் படித்தால் கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடியும் என்பதில் தெளிவுடனும் நம்பிக்கையுடனும் இருந்தேன்” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
நீட் தேர்வு குறித்த சர்ச்சை நிலவிய போதிலும், எந்தவிதக் கவனச்சிதறலும் இன்றித் தொடர்ந்து படித்து அகில இந்திய அளவில் 2-ஆம் இடம் பிடித்துள்ள இந்த மாணவனின் நேர்மறையான எண்ணமும் நம்பிக்கையான பேட்டியும் தற்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
