
சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபு. இவர் தனது நண்பர்களுடன் இடை மேலூர் பகுதியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அவரை காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அரிவாளால் மனோஜை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது மனோஜ் புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி மனோஜிடம் பேசுவதை தவிர்த்தார்.
அவரது வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். இதனால் கோபமடைந்த மனோஜ் புவனேஸ்வரியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் புவனேஸ்வரியின் அண்ணன் அபினவ் மனோஜிடம் தகராறு செய்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது மனோஜ் அபிமன்யுவை கத்தியால் வெட்ட முயற்சி செய்தார்.
இதனை பார்த்ததும் அபிமன்யுவின் தந்தை பாண்டியன் தனது மகனை காப்பாற்ற முயன்ற போது அவரது கையில் வெட்டு ஏற்பட்டு ஒரு கையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சமீபத்தில் மன உளைச்சலில் பாண்டியனும் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தனது தங்கை மற்றும் தந்தையின் இறப்பிற்கு காரணமான மனோஜை அபிமன்யு திட்டம் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.