பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆழ்கடல் பகுதியில் மௌரின் காலகோ (Maurene Calago) என்ற இளம்பெண் நடத்திய அண்டர்வாட்டர் போட்டோஷூட் தற்போது இணையதளங்களை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. அந்த இளம்பெண் கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, உலகின் மிகப்பெரிய மீன் இனமான ஒரு ராட்சத ‘திமிங்கலச் சுறா’ யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருக்கு மிக அருகில் வந்தது. மௌரின் எதையும் உணரும் முன்னரே, அந்த ராட்சதச் சுறா தனது வாயால் அவரது கையில் ஒரு மெல்லிய முட்டு (Nudge) கொடுத்தது.

​பொதுவாக இது போன்ற சூழலில் எப்பேர்ப்பட்ட வீரர்களுக்கும் இதயம் ஒரு நிமிடம் நின்றுவிடும். ஆனால், மௌரின் சற்றும் பதற்றமடையாமல், சுறாவைத் தொந்தரவு செய்யாதவாறு மெதுவாக நீந்தி மேலே சென்ற விதம் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் பகிர்ந்த இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “சுறா வந்து ‘சைடுல போம்மா என் போட்டோ கெட்டுப்போகுது’ என்று சொல்வது போல இருக்கிறது” என வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். விலங்குகளின் இடத்தில் நாம் விருந்தினர்கள் என்பதை நினைவூட்டும் விதமாக இந்த ‘ஜென்டில்’ சந்திப்பு அமைந்துள்ளது.