தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் போட்டி அரசாங்கம் நடத்த முயல்கிறார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ஆளுநர், “பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆளுநர் மாளிகையை நேரடியாக அணுகலாம்; சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய நினைப்பவர்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளைத் தனது அலுவலகத்தில் முறையிடலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரின் இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள சி.பி.ஐ., இது மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடும் மிகப்பொரிய அதிகார அத்துமீறல் என்றும், ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால் என்றும் சாடியுள்ளது. இதுகுறித்து மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகார எல்லையையும், கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் மதிக்காமல் ஆளுநர் அர்லேகர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆளுநரின் இத்தகைய தன்னிச்சையான மற்றும் மாற்று நிர்வாகத்தை உருவாக்க முயலும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு உடனடியாகச் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தின் சுயாட்சியையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் சீர்குலைக்கும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
