டெல்லியில் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சுவாச பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக காற்று மாசின் அளவு உயர்ந்து வருவதால், நகரம் முழுவதும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியும் காற்று மாசின் பாதிப்புக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “டெல்லியில் நான் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். அதற்குள் எனக்கு சுவாச தொற்று ஏற்பட்டுவிட்டது. டெல்லி ஏன் இவ்வளவு கடுமையான காற்று மாசால் சிக்கி தவிக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறேன். நாட்டில் ஏற்படும் காற்று மாசில் சுமார் 40 சதவீதம் புதைபடிவ எரிபொருட்களால் உருவாகிறது. இவ்வகை எரிபொருட்களை இறக்குமதி செய்ய ரூ.22 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இருப்பினும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ள மக்கள் இன்னும் தயாராக இல்லை” என்று வருத்தம் தெரிவித்தார்.
டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு தரக் குறியீடு ‘மிக மோசம்’ என்ற அளவில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காற்று மாசை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
