தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கை விசாரித்தனர்.

இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் அதன் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (25), அருண்குமார், அருளானந்தம் (34), பாபு (27), ஹெரன்பால் (29), மணிவண்ணன் (28), வசந்தகுமார் (27), சதீஷ் (28), சபரி ராஜன் (25) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

இன்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கும் நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் வழக்கில் 9 பெரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தி 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதாவது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய ஒரு அதிரடி தீர்ப்பை கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வரவேற்கிறோம். குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்.

அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிப்போம். நீதிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு இனிவரும் காலங்களில் இளைஞர்கள் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியத்தோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது. கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.