கர்நாடக மாநிலம் திர்த்தஹள்ளி தாலுகாவின் கொடூரு கிராமத்தைச் சேர்ந்த ரிதுபர்ணா, ஆரம்பத்தில் மருத்துவர் ஆகும் கனவில் ‘நீட்’ தேர்வை எழுதினார். ஆனால் எதிர்பார்த்த முடிவு வராததால், பெற்றோர் அறிவுரைப்படி பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து, 2022-ஆம் ஆண்டு சஹ்யாத்ரி இன்ஜினியரிங் கல்லூரியில் Robotics and Automation துறையில் சேர்ந்தார்.
ஆரம்பத்தில் சிறிது சோர்வாக இருந்தாலும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு செயல்களில் தீவிர ஈடுபாடுடன் இருந்து, விவசாய பயன்பாட்டுக்காக அறுவடை இயந்திரம் மற்றும் தெளிப்பான் மாதிரியை உருவாக்கினார்.
இந்த கண்டுபிடிப்பை கோவா INEX போட்டியில் அறிமுகப்படுத்தி, தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இதில் ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களையும் பின்னுக்கு தள்ளியிருந்தார்.
அதன்பின் NITK ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்து கற்றுக்கொண்டதோடு, கார்கில் முல்லை முகிலன் அவர்களுடன் திடக்கழிவு மேலாண்மைக் குழுவிலும் பணியாற்றினார். இந்நிலையில், Rolls-Royce நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்ய முனைந்தபோது ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டார்.
ஆனால், “ஒரு வாய்ப்பு தாருங்கள்” என கேட்டு, கடுமையான முயற்சியில் ஒரு மாதத்துக்கான பணியை ஒரு வாரத்திலேயே செய்து முடித்து நிர்வாகத்தை ஆச்சரியப்பட வைத்தார். இதன்பின் நேர்முகத் தேர்வுகள் மூலம் கடந்த 2024 டிசம்பரில் Pre-Placement Offer (PPO) பொறுப்பை பெற்றார்.
2025 ஜனவரி 2ஆம் தேதி முதல் கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்தபடி இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலிருந்தே வேலை செய்தார். இவரது திறமைக்கு மதிப்பளித்த நிறுவனத்தினர், ஏப்ரல் மாதத்தில் அவரது வருடாந்திர சம்பளத்தை ரூ.39.6 லட்சத்திலிருந்து ரூ.72.3 லட்சமாக உயர்த்தினர்.
தற்போது, ரிதுபர்ணா, தனது 7வது செமஸ்டர் முடிந்ததும், அமெரிக்கா டெக்சாஸ் நகரில் உள்ள Rolls-Royce நிறுவனத்தின் ஜெட் என்ஜின் உற்பத்திப் பிரிவில் பணியாற்ற உள்ளார். “ஒரு வாய்ப்பு இருந்தால் எல்லாம் முடியும்” என்பதை நிரூபித்த ரிதுபர்ணாவின் வாழ்க்கை பல இளைஞர்களுக்கு பெரும் மெய்நிகர் உதாரணமாக அமைந்துள்ளது.
