
பொதுவாக தற்போது பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் என பல பொது இடங்களில் மொபைல் ஃபோன்களுக்கு பொதுமக்கள் பலரும் சார்ஜ் செய்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் இப்படி சார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படும் அல்லது உங்கள் போன் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் நடைபெறும். எனவே பொது இடங்களில் சார்ஜ் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் வெளியில் செல்லும்போது முடிந்த அளவிற்கு பவர் பேங்க்களை எடுத்துச் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாம் சார்ஜ் செய்யும் கேபிள் மூலம் தகவல்களைத் திருடும் முறைக்கு ஜூஸ் ஜாக்கிங் என்று பெயர்.
மோசடிக்காரர்கள் பொது இடங்களில் உள்ள சார்ஜிங் போர்டுகளை அகற்றிவிட்டு போலி சார்ஜிங் போர்டுகளை அமைத்து விடுவார்கள். அதில் நம்முடைய போனை சார்ஜ் செய்யும் போது மேல்வேரை நமது போனின் செலுத்தி நம்முடைய போனை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்கள். அப்படி இல்லையென்றால் வங்கி கணக்கு மற்றும் புகைப்படங்கள் என தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படும். இந்த போலி சார்ஜிங் போர்ட் உண்மை போலவே இருப்பதால் இதனை கண்டறிவது மிகவும் கடினம் தான்.
இதிலிருந்து தப்பிக்க முதலில் பொது இடங்களில் சார்ஜ் செய்யாமல் இருக்க வேண்டும். ஒருவேளை பொது இடத்தில் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அந்த சார்ஜிங் போர்டில் ஏதாவது கழட்டி மாற்றப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளதா என பார்க்க வேண்டும். பின்னர் வெளிச்சந்தையில் கிடைக்கும் டேட்டா பிளாக்கிங் கேபிளை சார்ஜ் செய்ய பயன்படுத்தலாம். அதே சமயம் நம்முடைய போனில் சாஃப்ட்வர்களை தொடர்ந்து அப்டேட் செய்தும் இந்த மோசடியில் இருந்து தப்பிக்க முடியும்.