தமிழை தாய் மொழியாக கொண்டிராத பத்தாம் வகுப்பு சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து நடப்பு ஆண்டு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் இது பொருந்தும். இந்த நிலையில் சிறுபான்மை பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டிலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவர்களது சிறுபான்மை தாய்மொழி பாடத்தை பகுதி ஒன்றின் கீழ் தேர்வு எழுத அனுமதி வழங்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 10,000 மாணவர்கள் வரை தமிழ் மொழி பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.