தமிழகத்தில் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3,93,204 அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கைலாசநாதர் கோவில் மேட்டு தெருவில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இந்த நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு பாமக கவுன்சிலர் சரஸ்வதி மாணிக்கம் வந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த திமுகவின் வட்ட செயலாளரும் சரஸ்வதி மாணிக்கத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற ரவி மற்றும் திமுக நிர்வாகிகள்  வந்தனர்.

அப்போது ரவி மற்றும் சரஸ்வதி மாணிக்கத்திற்கு இடையே பொங்கல் பரிசு தொகுப்பை யார் வழங்குவது என்பது குறித்து கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் சிலர் பொங்கல் பரிசு தொகுப்பை நியாய விலை கடை ஊழியர்கள் வழங்கட்டும் என்று கூறினார். இருப்பினும் தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்றதால் சிலர் பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தாமதமானது. மேலும் இந்த சம்பவம் நம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.