தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் கடந்த முறை போன்று பொங்கல் பரிசுத் தொகில் இம்முறை எந்தவித பிரச்சினைகளும் குறைபாடுகளும் இருக்காது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் சக்ரபாணி ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு  தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி  வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 9 முதல் 12-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்.

வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட குடும்ப அட்டதாரர்களுக்கு ஜனவரி 13-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்த வருடம் திருப்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது. அங்கு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொருட்கள் தரமான முறையில் இருக்கும். மேலும் தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு கொள்முதல் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையின் கீழ் நடைபெற்று வரும் நிலையில், இடைத்தரகர்கள் இன்றி கரும்பு கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.