கர்நாடக மாநிலம் விஜயபுரம் மாவட்டம் மனகுலி தேசிய நெடுஞ்சாலையில் விஜயபுரா நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை மீறி எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நிறுத்தியிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேரும், பேருந்தில் பயணம் செய்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேருந்து ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, காரில் பயணம் செய்தவர்கள் தெலுங்கானாவை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்பது தெரியவந்தது.

இவர்கள் குடும்பத்துடன் முருதேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு காரில் திரும்பி சென்று கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.