சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து கவியரசு கண்ணதாசன் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தில் ஏறிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் தாளம் போட்டும், பாட்டு பாடியும் ரகளை செய்தனர். இதனை கண்டித்த கண்டக்டருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கோயம்பேடு நுழைவு வாயில் அருகே கண்டக்டர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் கல்லூரி மாணவர்கள் ரகளை செய்தது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு வந்ததும் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.