தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள படப்பைகாடு பகுதியில் ராமகுணா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதிவாணன் என்ற நண்பர் உள்ளார். இருவரும் பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் வேலை முடிந்து பூந்தமல்ல-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னீர்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அந்த பகுதியில் சர்வீஸ் சாலையில் மின்சார வாரியம் சார்பில் ராட்சத புதைவட கம்பி புதைக்க பள்ளம் தோண்டப்பட்டு கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போடப்பட்ட வருகிறது. அந்த பள்ளத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் பலத்த காற்றால் கீழே சரிந்து விழுந்ததாக தெரிகிறது. இரவு நேரம் சரியாக மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ராமகுணா சாலையில் சரிந்து கிடந்த இரும்பு தடுப்பு ஏறி பள்ளத்தில் மோட்டார் சைக்கிளோடு விழுந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமகுணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த மதிவாணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இறந்து கிடந்த ராமகுணாவின் உடல் அரச மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.