பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது என ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் பல்கலைகழகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி அறிவுறுத்தியுள்ளார்.. சென்னையில் பல்கலைக்கழக நிர்வாக அமைப்புகளுடன் ஆளுநர் நடத்திய கூட்டத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார்.

பல்கலை நிர்வாகிகள் சந்திப்புக்கு பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. பேராசிரியர் பணியிடங்களை வெளிப்படையாகவும், விதிகளுக்கு உட்பட்டும் நிரப்ப வேண்டும். சில பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்களே இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பல்கலைக் கழகங்களில் பெருமளவில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழ்நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததால் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.
மேலும் பல்கலைக்கழக பிரதிநிதிகள் உடனான கூட்டத்தில் உயர்கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் அதிருப்தி தெரிவித்தார். சிண்டிகேட், செனட் உள்ளிட்ட பல்கலை நிர்வாக அமைப்பு கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் நடைபெற வேண்டும். பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட்,செனட்  கூட்டங்கள் நடைபெறுவதில்லை. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான தேவை உள்ளது.

பல்கலைக்கழகங்களில் நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் நியமிக்க நிர்வாக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளது. யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.