சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே சிக்கம்பட்டி தனியார் மண்டபத்தில் சேலம் மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது, சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். நூல் விலை ஏற்றதால் விசைத்தறி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். அதனால் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். போதை பொருட்களை தடுக்க முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாதாமாதம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் எஸ்.பி-களுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்த வேண்டும். அதேபோல் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. காவல்துறையில் பணிபுரிந்தவர்கள் ஏன் மறுக்கிறார் என தெரியவில்லை. இதுவரை 14 பேர் இதனால் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முழு காரணம் ஆளுநர் தான். அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்தவர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பது தெரியவில்லை.

மூன்று மாத காலம் கிட்டத்தட்ட 100 நாட்கள் அப்படியே வைத்திருப்பது ஏன்? திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அதற்கான காரணத்தை கூற வேண்டும் ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் மீது எங்களுக்கு அதிக மரியாதை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு அதிக பாசம் உண்டு. கலைஞர் இறந்த பின்பு அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய மெரினாவில் எந்த கட்டுமானமும் செய்யக்கூடாது என நாங்கள் போட்ட வழக்கு தடையாக இருந்தது.

ஆனால் அன்றைய தினமே எங்களின் வழக்கு திரும்ப பெற்றோம். நாங்கள் வழக்கு திரும்ப பெறப்படவில்லை என்றால் கலைஞர் அவர்களை அடக்கம் செய்திருக்க முடியாது. மேலும் கலைஞரின் நினைவிடம் அருகிலேயே பேனா அமைக்கலாம். ஏனென்றால் நடுக்கடலில் அமைப்பதால் சுற்றுச்சூழல், மீனவர் நலன் பாதிக்கப்படும். மற்றவர்களும் போட்டி போட்டுக் கொள்வார்கள். அதனால் கடலை விட்டு விடுங்கள். கலைஞரின் நினைவிடம் அருகிலேயே பேனா நினைவுச் சின்னமாக தாராளம் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.