புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில் மாணவிகளின் உடல்கள் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மாணவிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர் கூறியதாவது, நான்கு மாணவிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியமே முதல் காரணம் எனக் கூறியுள்ளார்.

பின்னர் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் செயல்பாடு மிகவும் வேதனை அளிக்கும் விதமாக அமைந்திருந்தது. அதாவது மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் பெற்றோர்கள் வருவதற்கு முன்பாக உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?. இந்த விஷயத்தில் அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன? இதனை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது குறித்து முறையான நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேசிய அவர் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ரூ.2 லட்சம் என்பது போதாது. அவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இதில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக நடந்து கொண்டனர். அதனால் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் சோகத்தில் இருக்கும் கிராமங்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அரசும் காவல்துறையினரும் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.