தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது அதிகரித்து வருகிறது. தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் பல்வேறு வசதிகள் இருப்பதால் பெற்றோர் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த வருடம் கூட திமுக அரசால் செயல்படுத்தப்படும் பல நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.

அதன்படி 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கும் நிலையில் அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வி முடித்த மாணவர்களை ஒருவர் கூட விடாமல் அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை தொடங்கியதால் கோடை விடுமுறைக்கு முன்பாகவே கிட்டத்தட்ட 60,000 மாணவர்கள் சேர்ந்தனர். இதன் காரணமாக நடப்பாண்டிலும் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.