தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் சவுட்டுப்பல் மண்டலத்தில் உள்ள கைதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சோகமான விபத்து ஏற்பட்டது. விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற போலீசாரின் ஜீப், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதையடுத்து, எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. விபத்து மிகவும் பயங்கரமாக இருந்ததால், ஜீப்பின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த இரு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களாகத் திருவூரிலிருந்து பணி நிமித்தமாக பயணித்த ஆந்திர உளவுத்துறையை சேர்ந்த டி.எஸ்.பிக்கள் சக்ரதர் ராவ் மற்றும் சாந்தராவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் எஸ்.பி பிரசாத் மற்றும் டிரைவர் நர்சிங் ராவ் ஆகியோர் படுகாயமடைந்து சவுட்டுப்பல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சவுட்டுப்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் பதிவு செய்த விசாரணையில், லாரியை முந்த முயன்றபோது ஜீப் தடுப்பு சுவரில் மோதி பின்னர் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியில் மோதியது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் போலீஸ் துறையில் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.