மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியில் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்திய க்சேனியா அலெக்ஸாண்ட்ரோவா (30) ஒரு துயரமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜூலை 5ஆம் தேதி ரஷ்யாவின் ட்வெர் ஒப்லாஸ்டில், கணவருடன் காரில் பயணித்தபோது, திடீரென ஒரு எல்க் (பெரிய மான் இன வகை) அவர்களின் போர்ஷே காரின் கண்ணாடியில் மோதியது. இந்த மோதி விபத்தில் க்சேனியாவுக்கு மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டது. பல நாட்கள் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி உயிரிழந்தார்.
மிஸ் ரஷ்யா 2017 போட்டியின் முதல் ரன்னர்-அப்பாக இருந்த க்சேனியா, அதே ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் பங்கேற்று பெரும் வரவேற்பைப் பெற்றார். விபத்தின் போது பயணிகள் இருக்கையில் இருந்த அவர் கடுமையாகக் காயம் அடைந்தார். உயிர் பிழைத்த அவரது கணவர், “அது நடந்தது ஒரு நொடி நேரத்தில்… எதையும் செய்ய முடியவில்லை,” என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
எல்க் எனப்படும் இந்த மான் உலகிலேயே மிகப்பெரிய இனமாகக் கருதப்படுகிறது. சுமார் 320 முதல் 500 கிலோ எடையுடன், நான்கு அடி நீள கொம்புகளைக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட மான் நேருக்கு நேர் மோதியதால், க்சேனியாவின் கார் கடுமையாக சேதமடைந்ததோடு, அவரின் உயிரையும் பறித்துள்ளது. இந்தச் சோகம் உலக அழகிப் போட்டி ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
