
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று சுமார் 7 அடி ஆழம் கொண்ட சாயகழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் சுமார் ஏழு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென விஷ வாயு தாக்கியது. இதில் 4 பேர் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இறந்தவர்களின் சடலங்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த அந்த தொழிற்சாலையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.