மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், 10 வயது சிறுமியை அவரது சொந்த மாமாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக போபால் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தாயார் மருத்துவமனையில் உடன் இருந்துள்ளார். வீட்டில் பெற்றோர் இல்லாத இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், சிறுமியிடம் தனது வக்கிர புத்தியைக் காட்டியுள்ளார். இந்தத் தாக்குதலின் போது சிறுமி அலறியதைக் கேட்டு, அங்கிருந்த அவரது 12 வயது அண்ணன் அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த விபரீதம் வெளியே தெரிந்துள்ளது.

​கிராம மக்கள் திரண்டு வருவதைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு பக்கம் தந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் அடைக்கலம் கொடுக்க வேண்டிய உறவே இப்படி ஒரு கொடூரத்தைச் செய்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.