
கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பாச்சி பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபு (40). முதுகலை பட்டதாரியான பிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் விவசாயம் செய்து கொண்டே வீடியோ கேமரா மேனாகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பாதை தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டதால் பிரபு தனது பக்கத்தில் வீட்டுக்காரர் கோவிந்தராஜின் மனைவி ஜெயமணியை கத்தியால் குத்தினார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஜெயமணியின் படத்தை குரங்கு போல மார்பிங்க் செய்து சோசியல் மீடியாவில் பிரபு வெளியிட்டதால் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
பின்னர் ஊர் பெரியவர்கள் கடந்த ஏழாம் தேதி பிரபுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அவர் வராததால் ஜெயமணி தரப்பைச் சேர்ந்த ராகவேந்திரன், வருண் ஆகியோர் பிரபுவை அழைக்க சென்ற போது கோபத்தில் பிரபு கத்தியை எடுத்து வீசியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த ஜெயமணியின் உறவினர்களான கணேசன், மகாராஜா, சந்தோஷ் குமார், கோபி ஆகியோர் அங்கு பிரபுவை சரமாரியாக அடித்தனர். இதில் படுகாயமடைந்த பிரபு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வருண், ராகவேந்திரன் உட்பட ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.