திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் என்ற பகுதியில் உள்ள ஜி.என் கார்டனை சுற்றி குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. அந்த கார்டனுக்கு அருகே உள்ள பாறைக்குழியில் மாநகராட்சியின் சார்பில் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றம் வீசுவதாக பலமுறை கம்ப்ளைன்ட் செய்துள்ளனர். மேலும் இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்களுக்கு நோய் தொற்று மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படாததால் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக நிறுத்த கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜி என் கார்டனின் நுழைவு வாயிலின் ஒரு பகுதியில் நேற்று காலை 9 மணி முதல்  அப்பகுதி மக்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரை எழுத்தர்கள் என 400- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குப்பைகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்த கோரி போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொதுமக்களுடன் சேர்ந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அதன் பெயரில் மாநகர நல அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது பொதுமக்கள் அவரிடம் கூறியதாவது, இனிமேல் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு முன்பு கொட்டிய குப்பைகளின் மேல் மண்ணை போட்டு அந்த குழியை நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு அவர் மாநகராட்சி அலுவலரிடம் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் இந்த போராட்டத்தை தாங்கள் நிறுத்தப் போவதில்லை எனக்கூறி அப்பகுதியே சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் சேர்ந்து விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அப்பகுதியில் அதிக போலீசார் குவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.