குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மகளிர் உரிமைத் திட்டத்தை இன்று முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, இன்று சுமார் 1 கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தும் பணி நேற்றே பல இடங்களில் தொடங்கியிருந்தது.

ரூ.1000 பெறும் பெண்கள் பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் கையேடு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், செல்வமகள், பொன்மகன் சேமிப்புத் திட்டங்களிலும், தொடர் சேமிப்புத் திட்டம், நிலையான வைப்புத் திட்டங்களிலும் பணத்தை சேமிக்கலாம். கந்துவட்டிக்கு கடன் வாங்க வேண்டாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் உள்ளிட்ட பல வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன