மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா முதல் பாகத்தில் வில்லனாக நடித்து பகத் பாசில் அசத்தியிருந்தார். இந்நிலையில் புஷ்பா படம் தன்னுடைய கேரியரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என நடிகர் பகத் பாசில் கூறியுள்ளார்.

இதை இயக்குனர் சுகுமாரிடமே தான் பலமுறை கூறியுள்ளதாகவும் இதைப்பற்றி இப்படி வெளிப்படையாக கூறுவதில் எனக்கு எந்தவித கவலையும் இல்லை என்றும் கூறியுள்ளார். என்னுடைய பணியை நான் புஷ்பா படத்தில் நிறைவாகத்தான் செய்துள்ளேன். இந்தப் படத்திற்கு பிறகு ரசிகர்கள் என்னிடம் மேஜிக் எதிர்பார்க்கிறார்கள். நிச்சயம் அது இல்லை. நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் சுகுமார் மீது வைத்துள்ள அன்பு மட்டும்தான். என்னுடைய முழு கவனமும் மலையாள சினிமாவின் மீதுதான் இருக்கிறது. எனவே புஷ்பா திரைப்படம் என்னை பான் இந்தியா நடிகராக உயர்த்தியது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் பகத் பாசில் இப்படி கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.