உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் அராய் கிராமத்தில், ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குடிசைகள் புல்டோசர் கொண்டு கடந்த மார்ச் மாதம்  21ஆம் தேதி இடிக்கப்பட்டன. இதில் அனன்யா யாதவ் என்ற 8 வயது சிறுமியின் வீடும் இடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு வீடு தீப்பிடித்தபோது, அனன்யா தன்னுடைய குடிசை வீட்டுக்குள் ஓடி சென்று தனது ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கணிதப் புத்தகங்கள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்த காட்சி காணொளியாக பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் வேதனையை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ உச்ச நீதிமன்றத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் இந்த வீடியோ தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது “புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படும் குடிசைகளிலிருந்து புத்தகங்களை கையில் பிடித்துக்கொண்டு ஓடும் சிறுமியின் காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். இது குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் செயலாகும்” என்று நீதிபதி புயான் கருத்து தெரிவித்தார். மேலும், குடியிருப்பை இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது சமூக வலைதளத்தில் அனன்யாவின் கல்விக்காக நிதி உதவி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தப் பெண்ணைப் படிக்க வைப்பது நமது உறுதியான முடிவாகும். புல்டோசர் என்பது அறிவின் சின்னம் அல்ல; அது அழிவின் சின்னம். இது ஆணவத்தால் இயக்கப்படும், நீதியின் கட்டுப்பாடின்றி செயல்படும் ஒரு கருவி” எனக் கூறி, அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். அனன்யாவின் கல்வியைத் தொடரும் முயற்சி சமூகத்திற்கே ஓர் உணர்ச்சி மிக்க உதாரணமாக அமைந்துள்ளது.